கல்லூரிக்கால சம்பவம் ஒன்று.
கல்லூரி மூன்றாம் வருடம். காவேரி இல்லத்தில் Final year seniorsக்கு ஒதுக்கியது போக, மீதிருக்கும் தனி அறைகளை Third yearsக்கு ஒதுக்குவது வழக்கம். சில நண்பர்களின் ஆலோசனையின் பேரில், நானும் "பொருநை"யிலிருந்து காவேரியில் தனி அறைக்கு குடிபெயர்ந்து விட்டேன்.
காவேரியில் நுழைவாயிலின் இருபுறமும் செவ்வக வடிவிலான வெராந்தாவை சுற்றி வெளிப்புறமாக அறைகள் அமைந்திருக்கும். வெராந்தாவிலிருந்து நடுவில் OTSல் இறங்கி, மேல்நோக்கி சுற்றி பார்த்தால், மூன்று மாடி அறைகளும் அதற்கு மேல் வானத்தையும் பார்க்கலாம். தரைத்தளத்தில் அறைகள் எமக்கு ஒதுக்கப் பட்டிருந்தன.
Third year, second semester, study holidays சமயம் அது. Seniors எல்லோரும் Final semesterஐ முடித்துவிட்டு, ஹாஸ்டலை காலி செய்து விட்டு , சென்று விட்டதால் பெரும்பாலான அறைகள் காலியாக, ஹாஸ்டலே வெறிச்சோடி கிடந்தது. நம்மாட்களும் பலர் வீட்டுக்கு சென்று விட்டதால், ஹாஸ்டலில் நம் ராஜ்ஜியம்தான். பொழுது போகவில்லை என்றால், மூன்று மாடிகளும் சுதந்திரமாய் சுற்றி, எந்த அறையிலும் நுழைந்து, சில அறைகளின் சுவர்களில், Seniorsன் கலை நயத்தை கண்டு ரசிக்கலாம்.
சம்பவத்தன்று இரவு. Messல் சப்பாத்தி மற்றும் தயிர் சாதம். எனக்கு பிடிக்காத Combination. சப்பாத்தியுடன் தயிர் சாதத்தை இறக்கியதில், ஊறிய சப்பாத்தி செரிக்காமல் "மந்த்" என்று, படிப்பும் ஏறாமல், தூக்கமும் வராமல், அறைக்கு வெளியில் வந்து பார்த்தால் எவனையும் காணோமே! எங்க போனானுங்க, இந்த "ஆடு, குதிரை, தவுலு எல்லாம்.."! சரி, தனியா ஏதாவது விளையாடுவோம். OTSல் கிடந்த, நம்மாட்கள் வெட்டிப் போட்ட பனங்காய்கள் கண்ணில் பட, பந்து போல உயர எறிந்து விளையாண்டு பார்ப்போம். ஒரு காயை எடுத்து உயர விட்டேன். கனமாய் இருந்தாலும், சல்லென்று மேலே சென்று, இருளில் மறைந்து, சில வினாடிகளில், தொம்மென்று தரையில் விழுந்தது. "விளையாட்டு நல்லாத்தேன் இருக்கு.. இன்னொன்று விடுவோம்". எதையும் எதிர்பாராத அந்த கணம், "டமால்" என்று பெரிய கண்ணாடி வெடித்து நொறுங்கிய சத்தம். அது அடங்குவதற்குள், "ட்ட்ட்ட்ட்ட்டாடாடாடாடாடாய்ய்ய்ய்ய்ய்" என்று அடித் தொண்டையிலிருந்து ஒரு பெரிய அலறல். அக்கணத்திலேயே எல்லாம் அடங்கி வெறும் நிசப்த்தம்.
ஒன்றுமே புரியாத அக்கணத்தில், என் கால்கள் அனிச்சையாக வெராந்தாவில் தாவி, அறைக்குள் நுழைந்தன. ஒரு கணம் மூச்சே நின்று, இதயம் படபடப்பை கிளப்ப, "போச்ச்சு.. ஏதோ பெரிய விபரீதம் நிகழ்ந்து விட்டது. கடவுளே! போய் பார்க்கலாமா.." என்று பலவாறு பதட்டடத்தில் நின்று கொண்டிருக்கும்போது, "டொக் டொக்" கதவு தட்டும் சப்தம். திறந்தால், பக்கத்து ரூம் Civil நண்பன் முகத்தில் அதிர்ச்சியுடன் நிற்கிறான். "மாப்ள! இங்க யாராவது வந்தாங்களாடா?" என்று கேட்க, "இல்லையேடா..என்னாச்சிடா" என்று நான் கேட்டேன். "என்னை யாருமே கண்டுபிடிக்க கூடாதுன்னு, மூனாவதும் மாடில, ஒரு ரூம்ல உக்காந்து படிச்சிட்டு இருந்தேண்டா.. என்னாச்சின்னே தெரியல. கரெக்ட்டா அந்த ரூம் ஜன்னல் டாமால்ன்னு வெடிச்சதுல, செமயா பயந்துட்டேன்டா!" என்று அவன் சொல்ல, "அடேய், நீதானா அது.. ஏதும் அடி படல இல்ல" என்று கேட்டுவிட்டு, நடந்ததை நான் விவரிக்க, "உன் வேலைதானா அது" என்று அவன் கேட்க, அதுவரை இருந்த அதிர்ச்சி சிரிப்பாய் மாறி, எதேச்சையாய் நடந்த இரு நிகழ்வுகளை நினைத்து நினைத்து சிரிப்பு அடங்க வெகு நேரமாயிற்று.
"நேராதான் போச்சு.. Parabolic ரூட்ல போயி, எப்படி அது அந்த ரூம் ஜன்னல்ல அடிச்சிச்சின்னு தெரியல" என்று, அந்த நிகழ்வை என் குழந்தைகளிடமும் பகிர்ந்தது உண்டு.
அந்த Civil நண்பனுக்கு ஞாபகம் உள்ளதா இல்லையா என்று தெரியவில்லை.
No comments:
Post a Comment